திருவரங்குளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

திருவரங்குளம் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர்.

Update: 2022-02-13 19:08 GMT
திருவரங்குளம், 
வடமாடு மஞ்சுவிரட்டு
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள திருக்கட்டளை ஊராட்சி மேல கொல்லை கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு காளைகளுக்கும் தலா 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. காலை 10 மணிக்கு தொடங்கிய வடமாடு மஞ்சுவிரட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் குவிந்தனர்.
மாடுபிடி வீரர்களுக்கு பரிசு
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் இளைஞர்கள் மல்லுக்கட்டினர். அதனை பார்வையாளர்கள் கண்டுகளித்தனர். இதில், 8 மாடுகள் பிடிபட்டது. திருச்சி கோசுக்குறிச்சி அழகர்சாமி மற்றும் திருச்சி வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார் ஆகியோரது மாடுகள் பிடிபடாமல் சென்றது. பின்னர் மஞ்சுவிரட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 10 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்