தமிழகத்தில் மேலும் 2,296- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா வைரசின் 3-வது அலை உச்சம் பெற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு மளமளவென சரிந்து வருகிறது. இதனால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், தமிழகத்தில் அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது.
மாநிலத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,296- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 36 ஆயிரத்து 262- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 8,229- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 02 ஆயிரத்து 916- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மேலும் 461- பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்து 643- ஆக உள்ளது.