நாளை தொடங்குகிறது, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள்..!
மருத்துவ படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28ஆம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் 30ஆம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடைபெற தொடங்கியது.
இந்நிலையில் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என மருத்துவ கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது .
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டுதலின்படி 2021-22 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை முதல் தொடங்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும்.
உணவுக் கூடங்களில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் நூலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கல்லூரிகளில் விழாக்கள், கூட்டங்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது. வகுப்பறையிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தி இருப்பதை கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கல்வி கட்டணம் சிறப்புக் கட்டணம் ,தேர்வு கட்டணம், உணவு உட்பட விடுதி கட்டணம், புத்தகங்கள், வெள்ளை அங்கி, பல்கலைக்கழக பதிவு கட்டணம், காப்பீடு, ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட எந்த கட்டணங்களையும் வசூலிக்கக் கூடாது. 7.5 சதவீதம் முன்னுரிமை ஒதுக்கீட்டின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு அரசாங்கம் அனைத்து வகையான கட்டணங்களையும் செலுத்துவதால் எந்தவிதமான கல்வி உதவித்தொகைகளுக்கும் அவர்கள் விண்ணப்பிக்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.