பா.ஜ.க.வில் இருந்து விலகி கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்
பா.ஜ.க.வில் இருந்து விலகி கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை,
அ.தி.மு.க.வில் இருந்து விலகி கடந்த 1997-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தவர், கு.க.செல்வம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத விரக்தியில், அக்கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கினார். டெல்லி சென்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த கு.க.செல்வம், கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் அதிகாரபூர்வமாக இணைந்தார். ஆனால் எம்.எல்.ஏ.வாகவும் தொடர்ந்தார். அவருக்கு பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக கூறி கு.க.செல்வம் பா.ஜ.க.வில் இருந்து விலகி உள்ளார். அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கோ.செல்வம், மாவட்ட மருத்துவர் அணி துணைச்செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார், அ.ம.மு.க. மத்திய சென்னை மாவட்ட தலைவர் டி.எஸ்.சேகரன், தே.மு.தி.க. மத்திய சென்னை மாவட்ட துணைச்செயலாளர் ரமேஷ், பா.ம.க. துறைமுகம் பகுதி துணைச் செயலாளர் கணேசன், த.மா.கா. எழும்பூர் வட்ட தலைவர் மனோஜ்குமார் தலைமையில் நிர்வாகிகள் என பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாவட்டச்செயலாளர்கள் சேகர்பாபு, சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.