தஞ்சையில் 2-வது நாளாக மழை பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை
தஞ்சையில் 2-வது நாளாக பெய்த மழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
ராமநாதபுரம்,
மன்னார் வளைகுடா கடல்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இரவு முதல் சாரல் மழையாக தொடங்கி விடிய விடிய பெய்த மழை, அதிகாலையில் கனமழையாக பெய்தது.
நேற்று மதியம் வரை நீடித்த இந்த மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சி நிலை உருவாகி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் இரவில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் காலையில் மழை பெய்து வந்த நிலையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதில் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துகொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
கல்வித்துறை அதிகாரிகள் முறையாக அறிவிக்காததால் பள்ளிகள் விடுமுறை பற்றி தெரியாமல் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளில் வருகை பதிவு தொடங்கிய நேரத்தில் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் பள்ளிகளுக்கு வந்தபின்னர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், மீண்டும் மழையில் நனைந்து கொண்டு வீடுகளுக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். இதேபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.