பட்டியலினத்தவர்களுக்கு முடிதிருத்த அனுமதி மறுப்பு: ஆர்.டி.ஓ. 2-வது நாளாக விசாரணை
பட்டியலினத்தவர்களுக்கு முடிதிருத்த அனுமதி மறுப்பு குறித்து புதுப்பட்டி கிராமத்தில் ஆர்.டி.ஓ. 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தில் சலூன் கடைகளில் பட்டியலினத்தவர்களுக்கு முடிதிருத்த அனுமதி மறுப்பதாக கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. அபிநயா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி கருணாகரன், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் ஆகியோர் நேற்று 2-வது நாளாக புதுப்பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பட்டியலினத்தவர்கள் தரப்பில் காலம் காலமாக இந்த அநீதி நடப்பதாக தெரிவித்தனர். சலூன் கடை உரிமையாளர்கள் தரப்பில் தாங்கள் சாதி பாகுபாடு பார்ப்பதில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்களிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை அறிக்கை கலெக்டரிடம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.