பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து பெண் பலி
கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் புகுந்தது
புதுவை ஏம்பலம் அடுத்துள்ள நத்தமேடு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி செல்வி (வயது 50). இவர் அதே பகுதியை சேர்ந்த இரிசம்மாள் (60), முத்தமிழ், வேல்விழி, தனவள்ளி, ஆகியோருடன் நேற்று தவளக்குப்பம் அடுத்துள்ள நல்லவாடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த பஸ்சில் சென்றனர்.
பின்னர் நல்லவாடு வாட்டர் டேங்க் பகுதியில் பஸ்சில் இருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த கார் பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் தூக்கி வீசப்பட்டதில் செல்வி, இரிசம்மாள் உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
பெண் பலி
இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து 5 பேரையும், மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.