காரைக்காலில் அதிரடி ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

காரைக்காலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Update: 2022-02-12 16:03 GMT
காரைக்கால்
காரைக்காலில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஓட்டல் உரிமையாளர்

காரைக்கால் ராவணன் நகரில் வசித்து வருபவர் அப்துல் அமீன் (வயது 46). இவர் காரைக்கால் பாரதியார் சாலையில் ஓட்டல் மற்றும் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார். 
கடந்த ஆண்டு மதுரை, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும், அண்மையில் தஞ்சை, கும்பகோணத்திலும் சிலரது வீடுகளில் என்.ஐ.ஏ.  (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
இதில் ஒரு சிலரை கைது செய்ததாக கூறப்படுகிறது. அவர்களிடம் நடத்திய விசாரணையில்,   காரைக்கால் அப்துல் அமீன் குறித்த விவரம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதிரடி சோதனை

இதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை சென்னையில் இருந்து கேரளா, டெல்லி பதிவு எண் கொண்ட கார்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.
பின்னர் அவர்கள் அப்துல் அமீன் வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். சோதனையின் போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

வீட்டில் அங்குலம், அங்குலமாக அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தெரிகிறது. பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் செல்போன், கம்ப்யூட்டர், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின் போது, அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்