மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்..! கமல்ஹாசன் கோரிக்கை
தமிழ்நாடு மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
கடந்த ஆண்டு டிச.18ஆம் தேதி, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு அடுத்த நாளும் பல மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். 2 நாட்களில் 56 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் கடந்த மாதம் 25-ம் தேதி 56 மீனவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது 43 மீனவர்களுக்கு கொரோனா உறுதியானதால் இந்திய துணை தூதரக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தங்கவைக்கப்பட்டனர். இதற்கிடையில், 56 மீனவர்களில் 9 பேர் நேற்று தாயகம் திரும்பினர். மற்ற 47 மீனவர்களுக்கும் கொரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பிறகு, படிப்படியாக தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்” என்று அதில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 12, 2022