பள்ளியில் பர்தா அணிய தடை விதித்த விவகாரம் விசாரணை குழு அறிக்கையின்படி நடவடிக்கை அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

பள்ளியில் பர்தா அணிய தடை விதித்தது தொடர்பாக விசாரணை குழு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.;

Update: 2022-02-11 19:11 GMT
புதுச்சேரி
பள்ளியில் பர்தா அணிய தடை விதித்தது தொடர்பாக விசாரணை குழு அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பணி நியமன ஆணை

புதுச்சேரி கல்வித்துறையில் உள்ள 74 ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு ஆணை மற்றும் சமக்கர சிக்‌ஷாவில் ஒப்பந்த அடிப்படையில் உள்ள 59 ஆசிரியர்களுக்கு கல்வித்துறையில் நிரந்தர பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பணி பதவி உயர்வு, பணி நியமன ஆணைகளை வழங்கினர். இதில் கல்வித்துறை செயலர் சுந்தரேசன், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலிப்பணியிடங்கள்

பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அரசு துறைகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவித்தார். அதன்படி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். கல்வித்துறையில் ஆசிரியர் பணியிடங்கள், பதவி உயர்வுகள் நிரப்பப்பட்டு வருகின்றன.  காவல்துறையில் காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியிடங்கள் நேர்மையான முறையில் நிரப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

நடவடிக்கை

இதைத்தொடர்ந்து அரியாங்குப்பம் பள்ளியில் மாணவி பர்தா அணிய தடை விதிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரியில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. இருப்பினும் சில அரசியல்  அமைப்பினர் விசாரணை நடத்த கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்துள்ளோம். அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
====

மேலும் செய்திகள்