வரும் 26ம் தேதி நடைபெறவிருந்த 'புத்தகமில்லா தின' நிகழ்ச்சி ரத்து..!
மாணவர்களின் கற்றல் இழப்புகளை சரி செய்ய வேண்டியுள்ளதால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்லும் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்துவதும் நோக்கத்துடனும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ம் தேதி புத்தகமில்லா தினம் ( No Bag Day ) கடைபிடிக்கப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
முன்னதாக கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. எனவே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதனால் 26ஆம் தேதியன்று நடைபெற இருந்த ‘புத்தகமில்லா தின’ நிகழ்ச்சி செய்யப்படுவதாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.