உலகில் வாழ பிடிக்கவில்லை - 5 மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை

உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு சிறுவன் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-10 07:12 GMT
சென்னை,

சென்னை வானகரம் அருகே உள்ள அடையாளம்பட்டு அடுக்குமாடி குடியிருப்பில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அருண் சாவுன் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். சாவுன் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல சாவுன் தனது மனைவியுடன் அறையிலும், மற்றொரு அறையில் 2 மகன்களும் படுத்து தூங்கினர். 

இன்று காலையில் கண்விழித்த போது அண்ணனுடன் படுத்துக் கிடந்த ஹாருஸ் மாயமாகி இருப்பது கண்டு சாவுன் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.  

இந்த நிலையில் அதே குடியிருப்பில் உள்ள வீட்டின் பால்கனியில்  சிறுவன்  ஒருவன் தலை சிதறி இறந்து கிடப்பதாக மதுரவாயல் போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. 

பின்னர்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுவன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த சிறுவன் அதே குடியிருப்பைச் சேர்ந்த சாவுனின் மகன் ஹாருஸ் என்பது தெரிந்தது. பின்னர் சிறுவனது வீட்டிற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.  அங்கு சிறுவன் ஹாருஸ் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். 

இது தொடர்பாக போலீசார் ஒருவர் கூறியதாவது:-

சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் எழுதிய  கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. 

அதில், இந்த உலகத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா இருவரும் உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள். போலீசார் யாரும் எனது பெற்றோரை தொந்தரவு செய்ய கூடாது என்று எழுதப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்