தனிமையில் சந்தித்து பேசியபோது மனைவியின் கள்ளக்காதலனை துப்பாக்கியால் சுட்ட விவசாயி...!
கள்ளக்காதலர்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது மனைவியின் கள்ளக்காதலனை விவசாயி துப்பாக்கியால் சுட்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த வேடியப்பனூர் அருகே உள்ள செல்வபுரம் கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 49) விவசாயி. இவருக்கு 2 மனைவிகள்.
இதில் 2-வது மனைவி சுதாவிற்கும், திருவண்ணாமலை அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்த ஹாஜிபாஷா (35) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்ததும் சுதாவை சின்னதுரை கண்டித்து உள்ளார். ஆனால் சுதா கள்ளக்காதலை கைவிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியபாலியப்பட்டு கிராமம் அருகே சுதாவும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷாவும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் சின்னதுரைக்கு தெரியவரவே அவர் ஆத்திரம் அடைந்தார். இதனை தொடர்ந்து வேடியப்பனூரை சேர்ந்த அவரது நண்பர் மணி (44) என்பவரிடம் நாட்டு துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நண்பர் சத்யமூர்த்தியுடன் கள்ளக்காதலர்கள் இருந்த இடத்துக்கு சின்னதுரை சென்றார்.
அங்கு பேசிக்கொண்டிருந்த சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹாஜிபாஷா ஆகியோரை பார்த்து அவர் கடும் கோபம் அடைந்தார். உடனே சின்னதுரை தான் எடுத்து வந்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹாஜிபாஷாவை நோக்கி ‘டுமீல்’, ‘டுமீல்’ என சுட்டு உள்ளார். இதில் அவர் முழங்கை, இடுப்பு, தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அலறினார்.
துப்பாக்கியால் சுடப்பட்ட சத்தத்தையும் ஹாஜிபாஷா அலறும் சத்தத்தையும் கேட்ட அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர்.
அவர்கள் வருவதை பார்த்ததும் சின்னதுரையும், சத்யமூர்த்தியும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் இருந்த ஹாஜிபாஷாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஹாஜிபாஷா கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய சின்னதுரை, சத்யமூர்த்தி ஆகியோரை தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நாட்டு துப்பாக்கியை கொடுத்த மணியும் கைது செய்யப்பட்டார்.
நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. மனைவியுடன் பேசிக்கொண்டிருந்த கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.