தமிழக ஊராட்சி பகுதிகளில் ரூ.336 கோடியில் 114 பாலங்களுக்கான கட்டமைப்பு பணிகள்

தமிழகத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ரூ.336 கோடி செலவில் 114 பாலங்களுக்கான கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-02-09 23:52 GMT
சென்னை,

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2020-21-ம் ஆண்டில் ரூ.353.93 கோடி செலவில் 106 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள 198.6 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவது, 121 பால கட்டுமானப்பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு நபார்டு திட்டத்தின் கீழ் முன்மொழிவு அனுப்பப்பட்டது.

அந்த திட்டம் 2020-21-ம் ஆண்டில் பரிசீலிக்கப்படவில்லை. இதுதொடர்பாக கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அந்த முன்மொழிவு, நிதித்துறை வழியாக நபார்டு வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

114 பாலங்கள்

இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் நபார்டு வங்கியின் துணைப் பொதுமேலாளர் எழுதிய கடிதத்தில், 121 பாலங்களை கட்டுவதற்காக ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.229.96 கோடி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 7 பாலங்கள் கட்டுமானப் பணி கைவிடப்பட்டது. மேலும், மீதமுள்ள 114 பாலங்களை கட்டுவதற்கான திருத்திய மதிப்பீட்டை கணக்கிடும்போது, 2021-22-ம் ஆண்டுக்கான நபார்டு திட்டம் மூலம் ரூ.336.70 கோடியாக உயர்த்தி வழங்கி அரசு உத்தரவிட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை அரசு ஏற்று, அதற்கான ஆணையை பிறப்பிக்கிறது.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு

இந்த திட்டப்படி, காஞ்சீபுரம் மாவட்டம் பி.எஸ். சாலையில் இருந்து தண்டலம் வரை; சிறுபிணையூர்-வடபாதி சாலையில்; காந்தூர் மேட்டுத்தெருவில்; எஸ்.எஸ்.சாலையில் இருந்து எரையூர் சாலை வரை;

திருவள்ளூர் மாவட்டம் அமுதூர்மேடு முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே; காரனோடை முதல் சீமவரம் சாலை வரை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே;

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூரில் வி.என்.சாலை முதல் மாவதி சாலை வரை பாலங்கள் கட்டும் பணியும்;

செங்கல்பட்டு மாவட்டம் லத்தூரில் சேவூர் முதல் செம்பூர் சாலை வரையும்; முள்ளி முதல் டி.டி.சாலை வரையும் பாலம் மறுகட்டமைப்பு பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்