பட்டியல் சமூகத்தினருக்கு முடி திருத்துவதில்லை என புகார் - நீதிபதிகள் அதிரடி கேள்வி

பட்டியல் சமூகத்தினருக்கு முடி திருத்துவதில்லை என தொடரப்பட்ட வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2022-02-09 10:39 GMT
மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த செல்வம், ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் செயல்படும் முடி திருத்தும் நிலையத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்வது இல்லை என புகார் தெரிவித்திருந்தார்.
 
இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், “அது உண்மையாய் இருப்பின் மிகப்பெரிய பிரச்சனை. குறிப்பிட்ட சமூகத்திற்கு என பிரத்யோகமான முடி திருத்தும் நிலையம் உள்ளதா? ஏன் இது போன்ற பாகுபாடு உள்ளது? என கேள்வி எழுப்பினர். 

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்