ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம்,
ராமேஸ்வரம் உட்பட தமிழக பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்தும் மீனவர்களின் 135 படகுகளை சிறைபிடித்து கடந்த 5 ஆண்டுகளாக யாழ்ப்பாணம், ஊர்க்காவல் துறை, காரைநகர் கடற்படை முகாமில் வைத்திருந்தனர். இந்தநிலையில் மீனவர்களை மட்டும் அவ்வப்போது சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவித்தனர். அதன் பின்னர் இலங்கை அரசு இந்த படகுகளை அரசுடமையாக்கப்பட்டது.
இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு முடிவுற்ற நிலையில் 135 படகுகளையும் ஏலம் விடுவதற்கு இலங்கை அரசு ஆணை பிறப்பித்தது. அதன்பேரில் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகர் கடற்படை முகாமில் கடந்த சில நாட்களாக ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்களையும் அவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை கைது செய்தனர் இவர்களை சிறையில் அடைக்கப்பட்டு வரும் 22ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் மீனவர்கள் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
படகுகளையும், மீனவர்களையும் விடுவிக்க தாமதமாய் வருவதை கருத்தில் கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏறத்தாழ 820 படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
மேலும் மீனவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி மத்திய மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 11ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் அறிவித்துள்ளனர்.