“போராடி பெற்ற சமூகநீதியை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம்” - மு.க.ஸ்டாலின் பேச்சு

யாருக்காகவும், எதற்காகவும் நாம் சமூக நீதியை விட்டுத்தர மாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Update: 2022-02-08 13:34 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. இதுதவிர பிரதான அரசியல் கட்சிகளில் இடம் கேட்டு கிடைக்காதவர்களும், உள்ளூரில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு காரணமாகவும் சுயேச்சையாக பலர் களத்தில் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடலூர் மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்திற்கு மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் தேர்வாக நீட் உள்ளது. நீட் தேர்வை ஏற்றால், பொறியியல், கலை கல்லூரி மாணவர்களுக்கும் இது போன்று தேர்வு வரும். புதிய கல்விக்கொள்கை என்பதே மாணவர்களை வடிகட்டத்தான். கல்வி உரிமையை பறிக்கவே புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த துடிக்கிறார்கள்.

மாநில அரசு சட்டம் நிறைவேற்றினால் கவர்னர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும். பொதுப்பட்டியலில் உள்ள பொருள் குறித்து மாநில அரசின் மசோதாக்களை கண்டிப்பாக கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். நாடாளுமன்றத்துடன் முரண்படும் சட்டத்தை நிறைவேற்றினால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டியது கவர்னரின் கடமை. ஆனால் கவரனர் அந்த கடமையை தவறிவிட்டார். இனியாவது கவர்னர் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

போராடி பெற்ற சமூகநீதியை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். சமூகநீதி மட்டுமல்ல, மாநில சுயாட்சியும் திராவிட ஆட்சியின் கொடை தான். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய பண்பாட்டை சிதைக்கலாமா?  மாநில சுயாட்சியை நிலைநாட்ட அண்ணா, கலைஞர் மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மேலும் செய்திகள்