“மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானதல்ல” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நீட் விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானதல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த மசோதாவின் அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து கவர்னர் ஆ.என்.ரவி அனுப்பிய கடிதத்தை சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளதால் பெரும்பாலான தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது;-
“12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு சேர்க்கையை தமிழக அரசு நடத்தி வந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு குறைந்தது ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டி இருப்பதால் செலவு அதிகமாக உள்ளது. இதனால் ஏழை மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு எதிர்மாறானதாகவும், சிரமமானதாகவும் அமைந்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்தை கேட்டு, அதனை வல்லுனர்களுடன் ஆராய்ந்து ராஜன் குழு அறிக்கை தயார் செய்தது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. கொள்கை அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டத்தை அரசியல் சட்ட அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டு, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியது அரசியலமைப்பு முறைப்படி சரியானதல்ல.
சி.எம்.சி வேலூர் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நீட் தேர்வை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது என கவர்னர் தனது கடித்தில் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்பில் மாநில அரசுக்கும் சட்டம் இயற்றுவதற்கான அனுமதி உள்ளது. எந்த ஒரு சட்டமும் ஏதாவது ஒரு மத்திய அரசின் சட்டத்திற்கு மாறாக இருந்தால், அதற்கு அரசியல் சட்ட அமைப்பு 754/2-ன் கீழ் ஜனாதியின் ஒப்புதல் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு.
சட்டமன்றத்தில் சட்டமே இயற்றக்கூடாது என ஒரு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கொண்டு முடிவு செய்வது அரசியல் சட்ட அமைப்பையே கேள்விக்குறியதாக ஆக்கிவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.