பா ஜ க ஆதரவு எம் எல் ஏ க்கள் என்பதால் தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யாமல் அரசு புறக்கணிப்பு சபாநாயகரிடம் கூட்டாக புகார்

பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என்பதால் தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யாமல் புறக்கணிப்பதாக சபாநாயகர் செல்வத்திடம் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-02-07 14:13 GMT

புதுச்சேரி
பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என்பதால் தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யாமல் புறக்கணிப்பதாக சபாநாயகர் செல்வத்திடம் புகார் தெரிவித்தனர்.

பா.ஜ.க. வாக்குறுதி

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 6 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மேலும் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாகவும், 3 பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
தேர்தல் நேரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் முக்கிய பதவி தருவதாக கூறி பா.ஜ.க. சார்பில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களை கட்சியில் சேர்த்தனர். இதேபோல் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களிடமும் வாரிய தலைவர் உள்ளிட்ட பதவிகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.

கடும் அதிருப்தி

ஆனால் ஆட்சி அமைந்து 9 மாதங்கள் ஆகியும் பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அரசிடம் வலியுறுத்தியபோது வாரியங்கள் நஷ்டத்தில் இயங்குவதால் இப்போதைக்கு தலைவர் பதவி வழங்க முடியாது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியும் கைவிரித்துவிட்டார்.
இதனால் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் புதிதாக சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் தங்களது ஆதரவினை வாபஸ் பெற உள்ளதாகவும் தகவல் பரவியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு காணப்பட்டது.

சபாநாயகருடன் சந்திப்பு

இந்தநிலையில் பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களான அங்காளன், சிவசங்கரன்,  சீனிவாஸ் அசோக் ஆகியோர் சபாநாயகர் செல்வத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது அவர்கள் வாரிய தலைவர் பதவி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்ததாக தெரிகிறது. மேலும் தங்கள் தொகுதிகளில் பணிகள் நடக்காதது? குறித்து புகாரும் தெரிவித்தனர்.
முன்னதாக சுயேச்சை எம்.எல்.ஏ. சீனிவாஸ் அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்களுக்கு இன்னும் சட்டமன்ற அலுவலகம் கூட வழங்கப்படவில்லை. இருப்பதற்கு ஒரு நாற்காலி கூட வழங்கவில்லை. இதை பலமுறை அரசிடம் கூறிவிட்டோம் ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை.
கடந்த 9 மாதமாக நாங்கள் காத்திருந்தோம். ஆனால் பலன் எதுவும் இல்லை. இதுதொடர்பாக கவர்னரையும் சந்திக்க உள்ளோம். நாங்கள் மக்கள் பணியை தொடர்ந்து செய்ய கவர்னர் உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கெட்ட பெயர் ஏற்படுத்த...

அங்காளன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எங்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதிகூட வரவில்லை. தொகுதியில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை. எனது தொகுதி பணிகள் தொடர்பாக பல கடிதம் கொடுத்துவிட்டேன். ஆனால் பலன் இல்லை. எங்கள் தொகுதி மக்களுக்கு தேவையானதை செய்ய பா.ஜ.க. நினைக்கிறது. ஆனால் ஆட்சியாளர்கள் அதை எடுத்துச் செல்லவில்லை.
சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என்பதால் நாங்கள் சொல்வதைக்கூட கேட்பதில்லை. இவர்கள் பா.ஜ.க.வுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாரிய தலைவர் பதவி என்பது எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

புறக்கணிப்பு

சிவசங்கரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எனது தொகுதியில் 43 ஆயிரம் வாக்குகள் உள்ளது. ஆனால் மற்ற தொகுதிகளைப்போலவே எனது தொகுதிக்கும் புதிதாக கூடுதலாக 300 முதியவர்களுக்குத்தான் உதவித்தொகை வழங்கப்பட்டது. ரோடுகள் அனைத்தும் பழுதடைந்து கிடக்கின்றன. இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்கிறீர்களே? அவர்கள் தொகுதிக்கு என்ன செய்தார்கள்? என்று மக்கள் எங்களை கேள்வி கேட்கிறார்கள்.
எங்களால் தொகுதி மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் மேல் நம்பிக்கை வைத்து நாங்களாகத்தான் பா.ஜ..கவுக்கு ஆதரவு அளித்தோம். பா.ஜ.க. ஆதரவு எம்.எல்.ஏ. என்பதால் எங்கள் தொகுதிக்கு எந்த பணிகளையும் செய்யாமல் புறக்கணிக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தொகுதிகளில்...

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் மட்டும் வேலை நடக்கிறது. லாஸ்பேட்டையில் ரோடு போடுகிறார்கள். கொம்பாக்கத்தில் ரூ.9 கோடியில் சாலை அமைக்கிறார்கள். ஆனால் ரோடு வசதியே இல்லாத எனது தொகுதியில் எந்த வேலையும் நடக்கவில்லை.
வாரிய தலைவர்கள் பதவி எதையும் நாங்கள் கேட்கவில்லை. ஏனெனில் அமைச்சர் நமச்சிவாயத்தின் துறைகளிலேயே 5 வாரிய தலைவர்கள நியமிக்கலாம். நாங்கள் கேட்டால் அவர்கள் தருவார்கள்.
இவ்வாறு சிவசங்கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

இதுதொடர்பாக சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை

புதுவை மாநிலத்தில் தற்போது நிதிப்பற்றாக்குறை ஏதும் இல்லை. மத்திய அரசு போதுமான நிதி தந்துள்ளது. மத்திய அரசு ஜல்சக்தி திட்டத்துக்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அதை முழுவதும் செலவிடவில்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சரிவர ஒத்துழைப்பதில்லை. கடந்த 5 ஆண்டு ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. அவற்றை சரிசெய்து வருகிறோம்.
இப்போது வேலைகள் நடைபெற தொடங்கியுள்ளன. மார்ச் மாதத்துக்குள் அனைத்து வேலைகளும் நடைபெறும். அதிகாரிகளில் 50 சதவீதம் பேர் வேலை செய்வதில்லை. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் வேலை நடக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். எனது தொகுதியிலும் சரிவர பணிகள் நடக்கவில்லை.]

அதிகாரிகளை மாற்றுவோம்

எதிர்க்கட்சி தொகுதிகளில் வேலை நடப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசு அதிகாரிகள் கடந்த ஆட்சிபோல் நினைத்துக்கொண்டு சரிவர வேலைசெய்யாமல் உள்ளனர்.
ஒழுங்காக பணி செய்யாத அதிகாரிகளை நடவடிக்கை எடுத்து மாற்றுவோம். கலெக்டராக இருந்த பூர்வா கார்க்கும் மாற்றப்பட்டுள்ளார். வாரிய தலைவர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக சபாநாயகர் என்ற முறையில் முதல்-அமைச்சரிடம் பேசியுள்ளேன். 5 ஆண்டு எல்லை வரை இந்த ஆட்சி நடக்கும். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை இருக்கும்.

முதியோர் உதவித்தொகை

என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் முதியோர் உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. மழை நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக தலா ரூ.1 கோடியே 10 லட்சத்துக்கு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
புதுவைக்கு புதிய சட்டசபை ரூ.200 கோடியில் கட்டப்பட உள்ளது. விரைவில் இதற்கான டெண்டர் விடப்படும்.
இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

மேலும் செய்திகள்