மோடியின் உதவியால் புதுச்சேரி வளர்ச்சி பெறும் அறிவித்தபடி அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் ரங்கசாமி உறுதி
பிரதமர் மோடியின் உதவியால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். அறிவித்தபடி அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
பிரதமர் மோடியின் உதவியால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். அறிவித்தபடி அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
ஆண்டு விழா
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவன தலைவரும் முதல்-அமைச்சருமான ரங்கசாமி கட்சிக்கொடி ஏற்றினார்.
அதைத்தொடர்ந்து தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிகாந்தன், பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோபிகா, டி.பி.ஆர்.செல்வம், என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ரங்கசாமி
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் மக்கள் ஆதரவுடன் எங்கள் ஆட்சி அமைந்துள்ளது. புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
மத்திய அரசின் உதவியோடு என்.ஆர்.பேரியக்கத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடக்கிறது. புதுவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் திட்டங்களை தீட்டி வருகிறோம். நாங்கள் அறிவித்த அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்துவோம்.
மோடியின் உதவியோடு...
எங்கள் அரசின் திட்டங்கள் அனைத்து சமுதாயத்தினரின் வளர்ச்சிக்கானவையாக இருக்கும். நாங்கள் ஏற்கனவே அறிவித்தபடி அரசு காலிபணியிடங்களை நிரப்பப்படும். அதன் அடிப்படையில் காவல்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உதவியோடு, பிரதமர் மோடியின் உதவியோடு புதுவை மாநிலம் நிச்சயமாக வளர்ச்சி பெறும். இந்த ஆட்சி அமைய பாடுபட்ட எங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
வாரிய தலைவர்கள்
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரூ.1,729 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளதே?
பதில்:-மத்திய அரசிடம் ரூ.2 கோடி கூடுதலாக கேட்கப்பட்டுள்ளது.
கேள்வி:- வாரிய தலைவர் பதவி எப்போது வழங்கப்படும்?
பதில்:- வாரிய தலைவர் பதவி நிரப்பப்படும் போது உங்களுக்கு தெரியவரும்.
கேள்வி:- நடிகர் விஜய் உடனான சந்திப்பை கூட்டணி கட்சிகள் விமர்சித்துள்ளதே?
இதற்கு பதில் எதுவும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டார்.