பா.ஜ.க. கொடி, பேனர் தீ வைத்து எரிப்பு மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை

வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தின் முன்பு அக்கட்சியின் கொடி, பேனரை எரித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-02-06 23:14 GMT
வேலூர்,

வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு வேலூர் மாவட்ட தலைவராக உள்ளார். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சி 52-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தேர்தலையொட்டி வேலூர் சாய்நாதபுரம் சாஸ்திரிநகரில் 52-வது வார்டு பா.ஜ.க. சார்பில் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த அலுவலகம் முன்பாக பா.ஜ.க. கொடிகள் தோரணங்களாக கட்டப்பட்டிருந்தன. மேலும் கட்சி தலைவர்களின் படங்களுடன் பேனரும் வைத்திருந்தனர்.

தேர்தல் அலுவலகத்தை நேற்று திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி நேற்று காலை 6.30 மணியளவில் தேர்தல் அலுவலகத்துக்கு வேட்பாளர் கார்த்திகேயன் சென்றார்.

அங்கு அலுவலக வாசலின் முன்பு கட்டப்பட்டிருந்த பா.ஜ.க. கொடி மற்றும் தோரணங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கிருந்த பேனரும் கிழிக்கப்பட்டு, அதற்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் மர்மநபர்கள் பா.ஜ.க. கொடி தோரணங்கள் மற்றும் பேனரை தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

போலீசில் புகார்

இதுகுறித்து அவர் வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதையடுத்து மாநில செயலாளர் கார்த்தியாயினி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு வந்து பார்வையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து பாகாயம் போலீசில் வேட்பாளர் கார்த்திகேயன் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இது தொடர்பாக அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்