ரியல் எஸ்டேட் அதிபர் தனது குடும்பத்துடன் தற்கொலை
ஆவடியில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் அதிபர் தனது 14 வயது மகன் மற்றும் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டார்.
ஆவடி
ஆவடி அடுத்த கோயில்பதாகை மசூதி தெருவை சேர்ந்தவர் முகமது சலீம் (44) இவரது மனைவி சோபியா நஜீமா (37), இவர் கடந்த 20 ஆண்டுகளாக சென்னை அசோக் நகரில் எஸ்.எம்.எண்டர்பிரைசஸ் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவர்களுக்கு அப்துல் சலீம் (14) என்ற மகன் உள்ளான். பிறந்ததிலிருந்தே அப்துல் சலீமுக்கு காது கேட்காமலும் வாய் பேச முடியாமலும் இருந்ததால் இருவரும் மன விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு முகமது சலீம் மாங்காடு பகுதியில் வசிக்கும் அவரது அக்கா சலீனா (48) என்பவர் செல்போனுக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ”இந்த மெசேஜ் படிக்கும்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையை முடித்து இருப்போம். இது குறித்து யாருக்கும் சொல்ல வேண்டாம். கேரளா மற்றும் சென்னை உறவினர்களுக்கு இது குறித்து சொல்ல வேண்டாம். எங்களது போட்டோவை பத்திரிகை மற்றும் போலீசாருக்கு தர வேண்டாம். இந்த இடம், பொருட்களை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நகைகள் எனது அக்கா பொண்ணுக்கு கொடுக்க வேண்டும்.” உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி இருந்தார்.
குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்த சலீனா குடும்பத்தினர் முகமது சலீம் வீட்டிற்கு காலை 7 மணிக்கு வந்து பார்த்த போது படுக்கை அறையில் முகமது சலீமின் மகன் அப்துல் சலீம் தலை, முகம் முழுவதும் பாலிதீன் கவரால் சுற்றப்பட்டு படுக்கையில் பிணமாக இறந்து கிடந்ததையும் படுக்கையறையில் இருந்த மின் விசிறியில் ஒருவரும் மின் விசிறி ஊக்கில் ஒருவருமாக முகமது சலீம் மற்றும் சோபியா நஜீமா ஆகிய இருவரும் நைலான் கயரால் முகத்தில் பாலித்தீன் கவர் மூடி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது சில கடிதங்களை கண்டெடுத்தனர். அதில் “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நாங்களே எடுத்த முடிவு. இதுகுறித்து எங்கள் குடும்பத்தாரை தொந்தரவு செய்யாதீர்கள் என்று போலீசாருக்கும் மற்றொரு கடிதத்தை தனது உறவினருக்கும் எழுதியுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன் என மூவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.