நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 60 ஆயிரம் பேர் போட்டியிட மனு இன்று மனுக்கள் மீது பரிசீலனை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது. நேற்று வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இன்று மனுக்கள் மீது பரிசீலனை நடக்கிறது.

Update: 2022-02-05 00:06 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

11 ஆண்டுகளுக்கு பிறகுதற்போது மீண்டும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

19-ந்தேதி தேர்தல்

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.

பலமுனை போட்டி

இதுதவிர பிரதான அரசியல்கட்சிகளில் இடம் கேட்டு கிடைக்காதவர்களும், உள்ளூரில் தங்களுக்கு உள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டும் சுயேச்சையாக பலர் களம் இறங்கி உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சி, நகராட்சிகளில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களில் பலர் உள்ளூரில் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.

தி.மு.க. கூட்டணி - அ.தி.மு.க. கூட்டணி இடையே தான் நேரடி போட்டி என்றாலும் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் பலம் வாய்ந்த சுயேச்சை வேட்பாளர்கள் பலர் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் களத்தில் உள்ளனர்.

வேட்புமனு தாக்கல்

தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் வேட்பு மனுதாக்கல் தொடங்கிய நிலையிலும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. எனவே, 1-ந் தேதி வரை வேட்பு மனுதாக்கல் மிகவும் மந்தமாகவே இருந்தது.

கடந்த 3 நாட்களாகவே அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வந்தன. இதன்காரணமாக 2-ந் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் விறுவிறுப்படைந்தது. நேற்று முன்தினம் மட்டும் 27 ஆயிரத்து 365 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

திருவிழா கூட்டம்

நேற்று வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் போட்டி போட்டுக் கொண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

கடைசி நேரத்தில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பலரும், பிரதான கட்சிகளில் சீட் கிடைக்கும் என காத்திருந்து ஏமாற்றத்துக்கு உள்ளானோர் சுயேச்சையாகவும் அவசர அவசரமாக வேட்பு மனுக்களை தயார் செய்து அளித்தனர்.

ஏராளமான சுயேச்சை வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்வதற்காக குவிந்தனர். அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் ஒரே நேரத்தில் திரண்டதால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் திருவிழா போன்று கூட்டம் திரண்டது.

கூடுதல் பாதுகாப்பு

அதிருப்தி வேட்பாளர்களால் மோதல் ஏற்படக்கூடும் என்பதால் வேட்பு மனுதாக்கல் செய்யும் இடங்களில் வழக்கத்தைவிட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல இடங்களில் வேட்பாளர்களுடன் அவர்களது ஆதரவாளர்கள் திரண்டு வந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

மாலை 5 மணிக்கு முன்னதாக வந்த வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன்பிறகு அவர்களின் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று மட்டும் 27 ஆயிரம் பேர் வரை வேட்பு மனுத்தாக்கல் செய்ததாக தோ்தல் கமிஷன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி மொத்தம் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று வேட்புமனு பரிசீலனை

இன்று (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வார்டு வாரியாக இந்த பணி நடக்கிறது. வேட்புமனு பரிசீலனையின்போது வேட்பாளர், முன் மொழிபவர் அல்லது வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட நபர் என யாராவது ஒருவர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு வருகிற 7-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். மாலை 3 மணிக்கு பிறகு தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்