நீட் விலக்கு மசோதா: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்க கூடாது - நயினார் நாகேந்திரன்
நீட் விலக்கு மசோதா குறித்து நடைபெறும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பாஜக பங்கேற்க கூடாது நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிவிட்டார். நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
கவர்னருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்க கூடாது என்பதே தனது எண்ணம் என பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் சந்திக்க உள்ளார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னருக்கு அண்ணாமலை நன்றி தெரிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.