வாக்காளர் பட்டியலில் இறந்ததாக அறிவிப்பு: அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அதிர்ச்சி

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததால் நாகை நகராட்சி அ.தி.மு.க. பெண் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார்.

Update: 2022-02-03 22:58 GMT
நாகப்பட்டினம்,

நாகை நகராட்சி தேர்தலில் நாகூர் பட்டினச்சேரி 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் எம்.சி.ஏ. பட்டதாரியான அமிர்தவள்ளி (வயது 33) என்பவர் போட்டியிடுகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவம் வாங்குவதற்காக நாகை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது அவருடைய பெயர், வரிசை எண் உள்ளிட்டவைகள் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக அந்த படிவத்தில் இடம்பெற்றிருந்தது.

இதனால் அவருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை வழங்க முடியாது என நகராட்சி அலுவலர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த அமிர்தவள்ளி தான் உயிரோடு இருக்கும்போது தனது பெயர் துணை வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயரோடு இடம்பெற்றது எப்படி? இந்த தவறுக்கு யார் காரணம்? என்று நகராட்சி அலுவலர்களிடம் முறையிட்டார். ஆனாலும் அங்கு அவருக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

வேட்பு மனு படிவம் தர மறுப்பு

இதையடுத்து நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்த அ.தி.மு.க. வேட்பாளர் அமிர்தவள்ளி நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்புமனு தாக்கல் செய்வதற்கான படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் வாங்குவதற்காக இன்று(நேற்று) காலை எனது கணவருடன் வந்தேன்.

வேட்பு மனு படிவத்தை கேட்டபோது நான் இறந்து விட்டதாகவும், இதனால் என்னுடைய பெயர் துணை வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டோர் அட்டவணையில் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்து நகராட்சி அலுவலர்கள் எனக்கு வேட்பு மனு படிவம் தர மறுத்து விட்டனர்.

ஏற்றுக்கொள்ள மறுப்பு

ஆனால் முதன்மைப் பட்டியலில் என்னுடைய பெயர் உள்ளது. இப்போது துணை பட்டியலில் என்னுடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இடம் பெற்றிருக்கிறது என நகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

நான் தான் அமிர்தவள்ளி என்பதை நிரூபிக்க எனது ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை காட்டியும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

உரிய நடவடிக்கை

இந்த குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் மணிவேலன் நேரில் வந்து இந்த புகார் தொடர்பாக ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்