சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது

சென்னையில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-02-03 22:09 GMT
சென்னை,

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 37). இவர் சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில், சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தனியாக நடந்து சென்ற இளம்பெண் ஒருவரை பார்த்ததும், மனதில் சபலம் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த அவர், மோட்டார் சைக்கிளை விட்டு, இறங்கினார்.

அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அவர் எல்லை மீறவே, இளம்பெண் சாலையில் ஓட ஆரம்பித்தார். ஏட்டு வனராஜூம் விரட்டி, விரட்டி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண் கூச்சல் போட்டு கூட்டத்தை கூட்டினார். உடனே ஏட்டு வனராஜ் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளார். அப்போது கார் ஒன்றில் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இருந்தாலும் சமாளித்து, தப்பிச்சென்றுள்ளார்.

கைதானார்

பாதிக்கப்பட்ட இளம்பெண் அதே பகுதியில் வீட்டு வேலை செய்து பிழைப்பவர். அவர் நடந்த சம்பவம் குறித்து, ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.

அப்போது போலீஸ் ஏட்டு வனராஜ், இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்த காட்சிகள் கேமரா வீடியோவில் பதிவாகி இருந்தது.

இதன் அடிப்படையில் ஏட்டு வனராஜ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஏட்டு வனராஜ், தான் காயம் அடைந்ததை மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொல்லி, தனது உயர் அதிகாரிகளிடம் விடுமுறை வாங்கிக்கொண்டு, வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்