சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னையில் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன எனவும், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Update: 2022-02-03 21:13 GMT
சென்னை,

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் விஷு மஹாஜன், எம்.எஸ்.பிரசாத், டி.சினேகா, சம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், அப்துல் ரஹ்மான், சிவகுரு பிரபாகரன், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர்கள் என்.கண்ணன், த.செந்தில்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

1,243 வாக்குச்சாவடிகள்

சென்னையில் வரும் தேர்தலுக்கு 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் 1,061 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனவும், 182 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என மொத்தம் 1,243 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக காணொலி காட்சி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான தேர்தலில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்களை பயன்படுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பில் சிலர் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு வரும் 5-ந்தேதி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து வரும் 10-ந்தேதி 2-ம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.

பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை

சென்னையில் கடந்த புதன்கிழமை வரை 32 வார்டுகளில் ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நாளை (இன்று) வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி நாள் என்பதால் அதிக வேட்புமனுக்களை எதிர்ப்பார்த்திருக்கிறோம். வரும் பிப்ரவரி 7-ந்தேதி மதியம் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகளை பொறுத்தவரை வேட்பாளர்கள் ஓட்டு சேகரிக்க வீடுவீடாக செல்லும்போது கூட்டமாக செல்லக்கூடாது. வரும் 11-ந்தேதி வரை சாலை பேரணி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவை நடத்துவதற்கு தமிழக தேர்தல் கமிஷனர் அனுமதி அளிக்கவில்லை. எனவே சென்னையில் சாலை பேரணி, பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை.

சென்னையில் உள்ளரங்குகளில் மட்டுமே பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும். அதுவும் 100 பேருக்கு மிகாமலும் அல்லது உள்ளரங்கின் பங்கேற்கும் எண்ணிக்கையில் 50 சதவீதம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 மையங்களில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

18 ஆயிரம் போலீசார்

பின்னர் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது:-

சென்னையில் 18 ஆயிரம் போலீசார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதல் தேவை என்றால் முன்னாள் ராணுவ வீரர்கள், என்.சி.சி. மாணவர்களை பயன்படுத்துவோம். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 போலீசார் என்ற வீதம் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

சென்னை மாநகராட்சி உதவி என்ஜினீயர் தாக்கப்பட்ட புகாரில் அவரை நேரில் அழைத்து வாக்குமூலம் பெற்றோம். அதில் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாக தெரிவித்தார். அவர்கள் முகம் அடையாளம் தெரியவில்லை எனவும், எம்.எல்.ஏ. இருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்