சென்னை மாநகராட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு வேட்புமனு தக்கல் செய்ய இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-02-03 18:51 GMT
சென்னை,

சென்னை மாநகராட்சியில், மண்டல ரீதியாக இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, பெண்களுக்கு அதிக வார்டுகள் ஒதுக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மண்டல வரியாக இல்லாமல் மொத்த இடங்களின் அடிப்படையில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 17-ந்தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறைவாகவும், சில மண்டலங்களில் அதிகமாகவும் ஒதுக்கியுள்ளதாக கூறி, சென்னை ஐகோர்ட்டில் முத்துராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

66 லட்சம் பேர்

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சென்னை மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 66 லட்சத்து 72 ஆயிரத்து 103 ஆகும். இதில், 46 லட்சத்து 46 ஆயிரத்து 732 பேர் சென்னையின் மையப்பகுதியில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். மக்கள்தொகை அடிப்படையில் வார்டு பிரிக்கும்போது நகரின் மையப் பகுதியில் வார்டுகள் சிறியதாகவும், பிற பகுதிகளில் பெரியதாகவும் இருக்கும் என கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு கெடு

இதன்பின்னர் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஓம்பிரமாஷ், ‘‘பெண்களுக்கு வார்டு ஒதுக்கியது மட்டுமல்ல, வார்டு மறுவரையறை செய்ததிலும் விதிமீறல் உள்ளது. எனவே, தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.

சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘‘அரசியல் அமைப்பு சட்டப்படி இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. மனுதாரர், வார்டு ஒதுக்கீடு மற்றும் மறுவரையறை செய்தது தொடர்பான அறிவிப்பாணையை எதிர்த்து முறையாக வழக்கு தொடர வில்லை. மேலும், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கெடு விதித்துள்ளது’’ என்று வாதிட்டார்.

தடை இல்லை

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன், வார்டு ஒதுக்கீடு செய்ததில் எந்த விதமீறலும் இல்லை என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த வழக்கில் விரிவான வாதம் செய்ய வேண்டியதுள்ளதால், அதற்கு அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய தடை கேட்ட மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போது இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்