மடிப்பாக்கம் திமுக நிர்வாகி கொலை - மேலும் 5 பேர் கைது
சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி 188-வது தி.மு.க. வட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் உதவி கமிஷனர்கள் பிராங் டி ரூபன், அமீர் அகமது உள்பட போலீசார்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் மீது சந்தேகம் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை, மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் கொலை வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர். விக்னேஷ்வர், கிஷோர் குமார், நவீன், புவனேஷ்வர், சஞ்சய் ஆகியோர் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேரை கைது செய்தது விக்கிரவாண்டி போலீசார்.