இடவசதி இல்லாமல் இருந்தால் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை

பள்ளிகளில் இடவசதி இல்லை என்றால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2022-02-01 22:07 GMT
சென்னை,

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதையொட்டி, சென்னை அசோக்நகர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்தாலும், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் போன்ற கொரோனா சார்ந்த பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (நேற்று) அசோக்நகர் மாநகராட்சி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். இதேபோல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி, மாவட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்

பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, இந்த பள்ளியின் நுழைவு வாயிலில், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் கருவி, கிருமி நாசினி வைக்கப்பட்டு, முக கவசம் இல்லாதவர்களுக்கு முக கவசம் வழங்கி, சமூக இடைவெளி கடைப்பிடித்து வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்ந்து உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் வகுப்புகளில், எண்ணிக்கையை பாதியாக பிரித்து உட்கார வைத்துள்ளனர்.

மாணவர்கள் அல்லது அவர்களது வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் பள்ளிக்கு வருவதை தவிர்த்து, உடனடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும். மாணவர்களின் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால், அதனை மறைக்காமல் ஆசிரியரிடம் சொல்ல வேண்டும். அதேபோல் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

கவனக்குறைவாக இருக்கக்கூடாது

தமிழகத்தில் மொத்தம் 33.46 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 77.83 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 372 லட்சம் மாணவர்களில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 275 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வியை பொறுத்தவரை 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்கள், ஐ.டி.ஐ. படிக்கும் மாணவர்களும், பள்ளியில் படிக்காதவர்களுமே உள்ளனர்.

மாணவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். இடவசதி இல்லாத பள்ளிகளில் வகுப்புகள் நடத்துவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரம் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு நாளும் முந்தைய நாளை விட நோய் தொற்று குறைந்து வருகிறது. ஆனாலும், தற்போது, 1,031 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுழற்சி முறையில் வகுப்புகள்

நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள், டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். தானாக யாரும் முடிவெடுத்து வீட்டுத்தனிமையில் இருக்கக்கூடாது. அடுத்த 2 வாரம் இதே அளவு ஒத்துழைப்பும், விதிமுறைகளையும் பொதுமக்கள் முறையாக பின்பற்றினால், கொரோனாவை ஒழித்து விடலாம்.

மேலும், இடவசதி இல்லாத பள்ளிகளில் தேவைப்பட்டால் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் அணியக்கூடாது என உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ளது. முக கவசம் போட சவாலாக இருக்கும் போது தனி இடத்தில் வந்து தளர்வு படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்