மாயாஜால பட்ஜெட் நாராயணசாமி குற்றச்சாட்டு

மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மாயாஜால பட்ஜெட் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

Update: 2022-02-01 18:49 GMT
புதுச்சேரி
மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மாயாஜால பட்ஜெட் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
பட்ஜெட் குறித்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏமாற்றம்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளாகி ஒமைக்ரான் தொற்று உச்சத்தை அடைந்துள்ள நிலையில் மக்கள் நலனுக்காக பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் ஏமாற்றம் தான் மிச்சம். 
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கு இந்த பட்ஜெட் வழிவகை செய்யப்படும் என்று எதிர்பார்த்த இந்த வேளையில் சுமார் 2½ கோடி பேர் வேலையில்லாமல் அவதிப்படும் நேரத்தில் 60 லட்சம் பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என்பது வருத்தம் அளிக்கிறது.
கொரோனா தொற்றால் மருத்துவ கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்ற அம்சம் இந்த பட்ஜெட்டில் இல்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இந்த ஆண்டு பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கி 80 லட்சம் வீடுகள் கட்டுவது என்பது எப்படி ஏற்புடையதாகும்.

மாயாஜால பட்ஜெட்

பட்ஜெட்டில் அரசு ஈட்டும் வருமானம் ரூ.24 லட்சத்து 84 ஆயிரம் கோடி. செலவினங்கள் ரூ.39 லட்சத்து 45 ஆயிரம் கோடி. ரூ.15 லட்சம் கோடி வெளிமார்க்கெட்டில் கடன் வாங்குவது பணவீக்கத்தை அதிகரிக்கும். விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். நாடு பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும். வேலையில்லா திட்டம் அதிகரிக்கும்.
மின்னணு பண பரிவர்த்தனை வரவேற்கத்தக்கது. அதே போல் மின்னணு கரன்சிக்கு வருமான வரி 30 சதவீதம் என நிர்ணயித்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. இந்த பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த எந்த அம்சங்களும் அறிவிக்கப்படவில்லை. 
இந்த பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்களுக்கான பட்ஜெட். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் ஒரு மாயாஜால பட்ஜெட்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்