தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை
நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.
சென்னை,
கொரோனா நோய் பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக கடந்த மாதம் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தமிழக அரசும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட ஊரடங்கை கடந்த 27-ந்தேதி தமிழக அரசு விலக்கிக் கொண்டு, பள்ளிகள், கல்லூரிகளை திறக்க அனுமதித்து உத்தரவை பிறப்பித்தது. நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.
இதனால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் வந்து விட்டுச்சென்றனர். இதனால் வழக்கத்தை விட இன்று சாலைகளில் போக்குவரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது.
இன்று திறக்கப்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, அனைத்து மாணவர்களுக்கும் (100 சதவீதம்) நேரடி வகுப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வித்தரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், அதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்திருக்கிறது.