காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிங்கார வடிவேல் கொரோனாவுக்கு பலி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சிங்கார வடிவேல் கொரோனாவுக்கு பலி கே.எஸ்.அழகிரி இரங்கல்.

Update: 2022-01-31 20:12 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சிங்கார வடிவேல் (வயது 87). வக்கீலான இவர், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 1979-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் அதன் பின்னர் 80, 84, 89 ஆண்டுகளிலும் நடந்த தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் அதிலிருந்து பிரிந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தேசிய தோட்டக்கலை வாரிய இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் சிங்கார வடிவேல் எம்.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தஞ்சை ரெட்டிப் பாளையத்தில் உள்ள மின்சார சுடுகாட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

சிங்கார வடிவேல் மறைவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்