தடையை மீறி மின்துறை ஊழியர்கள் போராட்டம் புதுச்சேரி காரைக்காலில் 144 தடை கலெக்டர்கள் உத்தரவு

தடையை மீறி மின்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்து இருப்பதையொட்டி புதுவை, காரைக்காலில் 144 தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-31 18:31 GMT
புதுச்சேரி
தடையை மீறி மின்துறை ஊழியர்கள் போராட்டம் அறிவித்து இருப்பதையொட்டி புதுவை, காரைக்காலில் 144 தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார்மயத்துக்கு எதிர்ப்பு

புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று (செவ்வாய்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்துறை தலைவர் எச்சரித்துள்ளார். 
இந்தநிலையில் மின்துறை ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் கலெக்டர் வல்லவன் மற்றும் மின்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

144 தடை உத்தரவு

மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் புதுச்சேரியில் மின்வினியோகம் தடைபடுவதோடு, மின்துறையின் சொத்துக்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற முக்கியமான சேவைகளும் மின்சார வினியோகத்தை சார்ந்துள்ளது.
எனவே புதுச்சேரி அரசு மின்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மின்சார சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவிப்பதை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 
அதன்படி மின்துறை அலுவலகங்கள், துணை மின்நிலையங்களில் மற்றும் மின்வினியோகம் சார்ந்த அரசு அலுவலகங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தக் கூடாது. இதனை மீறி சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது 188-ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மறுஉத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால்

இதேபோல் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், மின்துறை சம்பந்தப்பட்ட இடங்களில் வேலை நிறுத்தம் செய்வது, சட்டவிரோதமாக கூட்டம் கூட, போராட்டம் நடத்த 144 தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். இதை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்