அருள்வாக்கு அன்னபூரணியும்... ! அடங்காத சர்ச்சையும்...!
கவர்ந்து இழுக்கும் பேச்சால் மக்களை கட்டி போட்ட அன்னபூரணி சாமியார் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்பட்டு வருபவர் இவர்தான்.
சென்னை
அன்னபூரணி சாமியாரால் பெரிய அளவில் யாராவது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்ந்து இழுக்கும் பேச்சால் மக்களை கட்டி போட்ட அன்னபூரணி சாமியார்
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிக அதிகமாக பேசப்பட்டு வருபவர் இவர்தான்.
பளபளக்கும் பட்டுச்சேலையில் காட்சியளித்தபடி மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் இவரது கடந்த கால வாழ்க்கையே ஆகும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போதுதான் அவர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார்.
சொகுசு இருக்கையில் அமர்ந்தபடி அன்னபூரணி சாமியார் மேக்கப்புடன் மக்களுக்கு அருள்வாக்கும், ஆசி வழங்குவதையும் அவரது முந்தைய வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பலரும் பரப்பி அதனை புது டிரெண்டிங்காக மாற்றினார்கள்.
அருள்வாக்கு சொல்லும் அன்னபூரணி இருக்கையில் இருந்தபடியே மேலும் கீழும் ஆடியபடி கைகளை உயர்த்தி ஆசி வழங்கும் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் வயது வித்தியாசம் இன்றி பலரும் அவரது கால்களில் விழுந்து கிடக்கிறார்கள்.
அன்னபூரணி சாமியாரின் இந்த “ஸ்பிரிங்” ஆட்டத்தையும் பல விதங்களில் விமர்சனம் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இன்று பெரும்பாலான மக்கள் பல்வேறு கவலைகள், பிரச்சினைகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இதுபோன்ற இயலாமையை பயன்படுத்திக் கொண்டு பெண் சாமியார் அன்னபூரணி வால்போஸ்டர்கள் மூலமாக “உங்களது பிரச்சினைகள் தீர எங்களை நாடி வாருங்கள்” என்று விதவிதமான போஸ்டர்களையும் அச்சடித்து ஒட்டி பல இடங்களில் அருள்வாக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தி உள்ளார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது அதற்கான ஏற்பாடுகளை செய்ய தனிக்குழுவும் செயல்பட்டு உள்ளது. இந்த குழுவினர் முன் கூட்டியே அருள்வாக்கு நிகழ்ச்சியின்போது யார்-யார் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன்படியே நிகழ்ச்சி நடைபெற்றவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
தீராத நோய்கள் தீரும்... உங்கள் மனக்குறைகள் அகலும்... திருமண தடைகள் நீங்கும்... என்று மக்கள் தினந்தோறும் பிரச்சினைகளை முன்நிறுத்தியே பெண் சாமியார் அன்னபூரணி பிரசாரங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அனைத்துவிதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்க சக்தி அவதாரமாக திகழும் அன்னபூரணி சாமியாரை வழிபடுவோம் வாருங்கள் என்றும் தாயின் பாத கமலங்களில் தஞ்சம் அடைவோம் என்றும் போஸ்டர்களில் கவர்ந்திழுக்கும் வாசகங்களை குறிப்பிட்டு அருள்வாக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அன்னபூரணி பல இடங்களில் தனது கவர்ந்திழுக்கும் பேச்சாற்றல் மூலம் பொதுமக்களை கட்டி போட்டுள்ளார். பல இடங்களில் அருள் வந்து ஆடுவது போன்று பார்வையாலேயே ஆசி வழங்கி உள்ளார்.
அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் அவரே பரப்பி உள்ளார். அதனை பார்த்து பலரும் கூட்டம் கூட்டமாக அவரது அருள் வாக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளனர். அப்போது தன்னை நம்பி வந்துள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவரிடம் இருந்து அதிக அளவில் காணிக்கையாக பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.
புத்தாண்டையொட்டி இதுபோன்ற ஒரு அருள்வாக்கு நிகழ்ச்சிக்குதான் செங்கல்பட்டில் அன்னபூரணி சாமியார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர்களும், அவரது வீடியோக்களும் ஏற்படுத்திய பரபரப்பால் நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதன்பிறகு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்த அன்னபூரணி சாமியார் தனக்கும், தனது சீடர்களான குழந்தைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல் வருகிறது என்று குற்றம்சாட்டினார். அப்போது நிருபர்கள் அவரிடம், அருள்வாக்கு குறித்தும், கடந்த வாழ்க்கை குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதற்கு மழுப்பலாக பதில் அளித்து விட்டு அன்னபூரணி சாமியார் ஓட்டம் பிடித்தார்.
அதன்பிறகு அவர் வெளி இடங்களில் இன்னும் தலைகாட்டாமலேயே உள்ளார். அவரது நிகழ்ச்சிகள் எங்காவது நடைபெறுகிறதா? என்று உளவு பிரிவு போலீசாரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
அன்னபூரணி சாமியாரின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது போன்று மற்ற இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருள்வாக்கு நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அன்னபூரணி சாமியார் தொடர்ந்து தவித்து வருகிறார்.
இதற்கிடையே அன்னபூரணி சாமியார் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் அளித்த 5 புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது பற்றி போலீசாரும் ஆலோசித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் அன்னபூரணி சாமியாரின் கணவர் அரசுவின் மரணத்திலும் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலர் கூறி வருகிறார்கள். இதுபற்றியும் போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இதனால் அன்னபூரணி சாமியார் மீது நடவடிக்கை பாயுமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அன்னபூரணி சாமியாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு தொடர்பாக பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. வி.ஐ.பி.க்கள் பலரும் அன்னபூரணி சாமியாரிடம் நேரில் சென்று அருள்வாக்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும் போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன் முடிவில் அன்னபூரணி சாமியாருடன் தொடர்பில் இருந்த முக்கிய பிரமுகர்கள் யார்-யார் என்பது தெரிய வரும்.
அன்னபூரணி சாமியாரால் பெரிய அளவில் யாராவது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அன்னபூரணி சாமியார் மீது இந்து அமைப்புகள் கொடுத்த புகாரில், “மதத்தின் பெயரை சொல்லி மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி லீலைகளில் அவர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையிலேயே அன்னபூரணி சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.