கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

கடலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது;

Update: 2021-12-31 05:13 GMT
கடலூர்,

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று  மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் மாலையில் மழை பெய்யாமல் ஓய்ந்திருந்த நிலையில், இரவு 10.30 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதில் அவ்வப்போது கனமழையாகவும், விட்டு விட்டு சாரல் மழையாகவும் இன்று காலை 10 மணி வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது.

இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலைநகரில் 74.6 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக கீழ்செருவாயில் 2 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்