பிறந்த நாள் விழா கொண்டாடி விட்டு திரும்பிய போது விபத்து; அக்காள் - தங்கை பலி
பவானி லட்சுமி நகரில் தங்கையின் பிறந்தநாள் விழா கொண்டாடி விட்டு சித்தி மகன் பைக்கில் அமர்ந்து வந்த அக்கா, தங்கை லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தனர்
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள எலவமலை கிராமம் செங்கலப்பாறை பகுதியில் செல்வராஜ் என்பவர் மனைவி மற்றும் இரு மகளுடன் வசித்து வருகிறார்.
அவரின் இளைய மகளின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பவானி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஒரு பஞ்சாபி ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நேற்று இரவு சித்தி மகன் சுபாஷ் என்பவர் பைக்கில் பின்னால் அமர்ந்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
பைக் சேலம்-கோவை பைபாஸ் ரோடு, லட்சுமி நகர் ரவுண்டானா பகுதியில் வந்த போது சேலத்தில் இருந்து கொச்சின் செல்லும் லாரி அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து முன்னால் சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தங்கை நிஷா (17) கவுந்தப்பாடி அருகிலுள்ள பி. மேட்டுப்பாளையம் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மற்றும் ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி படித்து வரும் அக்கா ஷாலினி (19) இருவரும் லாரியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பைக் ஓட்டி வந்த சுபாஷ் (17) லேசான காயத்துடன் உயிர் தப்பி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பவானி டி.எஸ்.பி. கார்த்திகேயன், சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் இருவரின் உடல்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கையின் பிறந்தநாள் விழா கொண்டாடி விட்டு பைக்கில் சென்ற அக்கா தங்கை இருவரும் இறந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தாரை மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.