புத்தாண்டில் முதன்முதலாக சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துகிறது, இஸ்ரோ
புத்தாண்டில் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இந்த ராக்கெட் நானோ, மைக்ரோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும்.
சென்னை,
கொரோனா வைரஸ் தொற்றால் நடப்பு 2021-ம் ஆண்டில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோவின் விண்வெளி திட்டங்களும் பாதித்துள்ளன. இதன் காரணமாக புத்தாண்டில் புதிய வேகம் காட்டுவதில் இஸ்ரோ முழு முனைப்பாக உள்ளது.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்கும் ககன்யான் திட்டம், புத்தாண்டில் குறிப்பிடத்தக்க திட்டமாக உள்ளது. முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விண்கலத்தில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீரர்களை அனுப்புவதற்கு முன்பாக புத்தாண்டில் ஜூன் மாதத்துக்கு பின்னும், ஆண்டின் இறுதியிலும் என 2 முறை ஆள் இல்லாத விண்கலத்தை விண்ணில் செலுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதன்பின்னர், விண்வெளி வீரர்கள் (இந்திய விமானப்படையின் 3 அதிகாரிகள்) விண்கலம் மூலம் 2023-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இதன் மூலம் புத்தாண்டில் ககன்யான் திட்டம் சிறகுகளை விரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. .
ககன்யான் திட்டப்பணிக்காக 4 இந்திய விமானப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பயிற்சியில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்திய ஏவுகணை வாகனத்தில் விண்வெளி வீரர்களை குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பக்கொண்டு வரும் திறனை அடைவதுதான் ககன்யான் கனவு திட்டத்தின் நோக்கம் ஆகும்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற திட்டத்தை இஸ்ரோ கையில் வைத்துள்ளது. கொரோனாவால் தாமதமாகி வந்த இந்த திட்டமும் புத்தாண்டில் தொடங்கப்படும். ஆதித்யா-எல்1 திட்டம், பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட்- 1 (எல்-1) -ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் செருகப்படும். இது இஸ்ரோவின் 2-வது உயர்நிலை விண்வெளி இலக்குப் பணியாகும்.
புத்தாண்டின் 3-வது காலாண்டு அதாவது செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ தொடங்க இருக்கிறது. ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தின் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டறிவது உட்பட முக்கிய கண்டுபிடிப்புகள் அரங்கேறின.
சந்திரயான் 2 திட்டத்தில், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் கருவியான லேண்டர் மற்றும் ரோவர் விபத்துக்குள்ளான நிலையில், ஆர்பிட்டர் மட்டும் நிலவின் மேல்பரப்பில் சுற்றி வட்டமிட்டு ஆய்வு செய்து வருகிறது. அதை சந்திரயான்-3 திட்டத்தில் பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு உள்ளனர். இது சந்திரயான்-2 போன்ற கட்டமைப்பு தான், ஆனால் அதில் ஆர்பிட்டர் இருக்காது. சந்திரயான்-2-ன் போது ஏவப்பட்ட ஆர்பிட்டர் சந்திரயான்-3-க்கு பயன்படுத்தப்படும். சந்திரயான்-3 திட்டம் 2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும்.
குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதில் முன்னோடியாக விளங்கும் இஸ்ரோ, சிறிய செயற்கைகோள்களை எளிதாக விண்ணில் செலுத்துவதற்காக எஸ்.எஸ்.எல்.வி. என்ற சிறிய வகை ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.
இதனை புத்தாண்டின் முதல் காலாண்டில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எஸ்.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டை பொறுத்தவரையில் 500 கிலோ மீட்டர் தூர சுற்றுப்பாதையில் 500 கிலோகிராம் எடை கொண்ட செயற்கைகோளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகும்.
நானோ மற்றும் மைக்ரோ செயற்கைகோள்களை சுமந்து செல்லும் வகையில், மூன்று நிலைகளுடன் அனைத்து திட வாகனமாக எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டை உருவாக்க ரூ.169 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. புத்தாண்டில் இஸ்ரோ புதிய சகாப்தங்களை படைக்கும்.
மேற்கண்ட தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.