வழுக்கு மரம் ஏறும் போட்டிக்காக மரத்தை வெட்டி ஆற்றில் கொண்டு வரும்போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி

குளித்தலை அருகே வழுக்கு மரம் ஏறும் போட்டிக்காக மரத்தை வெட்டி ஆற்றில் கொண்டு வரும்போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார்.;

Update: 2021-12-30 19:23 GMT
குளித்தலை, 
காதல் திருமணம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மருதூர் அரிசன தெருவை சேர்ந்தவர் இளங்கோவன். இவருடைய மகன் பிரேமானந்தன் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த பிரபா (23) என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் பொங்கல் விழாவையொட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதையொட்டி குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி காவிரி கரையோரம் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் வளர்ந்திருந்த கற்பூர மரத்தை வாலிபர்கள் சிலர் நேற்று முன்தினம் வெட்டியதாக கூறப்படுகிறது.
காவிரி ஆறு
இந்த மரம் பெரியதாக இருந்ததால் அதனை காவிரி ஆற்றுத்தண்ணீரில் போட்டு தங்கள் பகுதிக்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று அதிகாலை பிரேமானந்தன் உள்ளிட்ட வாலிபர்கள் அந்த மரத்தை ஆற்றுநீரில் போட்டு தண்ணீரில் நீந்தியபடி மருதூர் ஆற்றங்கரைக்கு சென்று கொண்டு இருந்தனர்.
மரத்தை கயிற்றால் கட்டி அதன் மற்றொரு பகுதியை பிரேமானந்தன் பிடித்து இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் தண்ணீரில் நீந்திவரும் போது அப்பகுதியில் உள்ள ஆழமான இடத்தில் சுழல் ஏற்பட்டுள்ளது. அப்போது பிரேமானந்தன் தவிர அவருடன் வந்த வாலிபர்கள் தண்ணீரில் நீந்தி தப்பியுள்ளனர்.
தண்ணீரில் மூழ்கி பலி
ஆனால் மரம் தண்ணீரில் மூழ்கியபோது கயிற்றை பிடித்திருந்த பிரேமானந்தன் மரத்துடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பிரேமானந்தன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய பிரேமானந்தனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிரேமானந்தன் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேமானந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வழுக்கு மரம் ஏறும் போட்டிக்காக மரத்தை வெட்டி ஆற்றில் கொண்டு வரும்போது தண்ணீரில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்