கண், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட்போன்’ கொள்முதல்

கண், செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட்போன்’ கொள்முதல் தமிழக அரசு உத்தரவு.

Update: 2021-12-29 20:09 GMT
சென்னை,

தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர்.லால்வேனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

25.9.2020 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், 5 ஆயிரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் 5 ஆயிரம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிறரை எளிதில் தொடர்புகொள்வதற்காக ஒரு திறன்பேசியின் (ஸ்மார்ட்போன்) விலை ரூ.10 ஆயிரம் என்ற மதிப்பில், அதற்கேற்ற செயலிகளுடன்கூடிய திறன்பேசிகளை வழங்குவதற்கு ரூ.10 கோடி நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்வகையில் அவற்றை ரூ.10 கோடிக்குள் கொள்முதல் செய்வதற்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு அனுமதி வழங்கும்படி அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அவரது கருத்துருவை பரிசீலனை செய்து, அந்தத் தொகைக்கான நிர்வாக அனுமதியை வழங்கி அரசு உத்தரவிடுகிறது. 25.9.2020 அன்று தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு திறன்பேசியை ரூ.10 ஆயிரம் விலைக்கு மிகாமல் கொள்முதல் செய்ய வேண்டும். விலை மற்றும் கொள்முதல் செய்யும் திறன்பேசியில் வித்தியாசம் ஏற்பட்டால் அதற்கு அரசின் ஒப்புதலை பெற வேண்டும். ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்