தனியார் பஸ் டிரைவர் சங்க தலைவருக்கு அரிவாள் வெட்டு
திருபுவனை அருகே தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தனியார் பஸ் டிரைவர் சங்க தலைவரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருபுவனை அருகே தகராறு செய்ததை தட்டிக்கேட்ட தனியார் பஸ் டிரைவர் சங்க தலைவரை அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைகலப்பு
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையம் பாலர் பள்ளி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது46). தனியார் பஸ் டிரைவர் சங்க தலைவர். நேற்று முன்தினம் மாலை மதகடிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் மதகடிப்பட்டுபாளையம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவர் தனது நண்பர்களுடன் ஒரு தனியார் பஸ்சை மறித்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு வந்த பாஸ்கர், அவர்களிடம் ஏன் பஸ்சை மறித்து தகராறு செய்கிறீர்கள்? என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அரிவாள் வெட்டு
இந்தநிலையில் பாஸ்கர் பணிபுரியும் தனியார் பஸ் கம்பெனியின் மற்றொரு டிரைவர் டீசல் நிரப்ப மதகடிப்பட்டு பெட்ரோல் பங்க்குக்கு பஸ்சை கொண்டு வந்தார். பாஸ்கரும் அங்கு இருந்தார். அப்போது அசோக், அவரது அண்ணன் விவேக், நண்பர் பூபாலன் ஆகியோர் பாஸ்கரை சரமாரியாக தாக்கினர்.
பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாஸ்கரை வெட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்தவர்கள் பாஸ்கரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாஸ்கரை அரிவாளால் வெட்டியவர்களை உடனே கைது செய்ய கோரி பாஸ்கரின் உறவினர்கள் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒருவர் கைது
இதுபற்றி தகவலறிந்த திரு புவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் அஜய்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று பரசுரெட்டிபாளையத்தில் பதுங்கி இருந்த விவேக் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.