மெரினா கடற்கரையில் அலைகளை ரசிக்க மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக தற்காலிக பாதை

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலைகளை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக பாதையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

Update: 2021-12-28 22:04 GMT
சென்னை,

மாற்றுத்திறனாளிகளின் சுய மரியாதை மற்றும் உரிமைகளை ஊக்குவிப்பதற்கும், சிறந்த வாழ்வாதாரத்தை அளிக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திட ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந்தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையினால் அனுசரிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை கண்டுகளிக்க ஏதுவாக தற்காலிக பாதை அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நடைபாதையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிகேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று மாலை திறந்து வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக...

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள மெரினா கடற்கரைக்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலிகளில் எளிதாக கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை அருகிலிருந்து கண்டுகளிக்க ஏதுவாக, கடற்கரை சர்வீஸ் சாலையில் இருந்து கடற்கரை வரையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மரப்பலகையால் ஆன தற்காலிக பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, மணற்பரப்பில் இயங்கக்கூடிய 5 சக்கர நாற்காலிகள் மாநகராட்சி சார்பில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் ஓய்வெடுக்க சாமியானா பந்தலும், அவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த சிறப்பு வசதி வருகிற ஜனவரி 3-ந்தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 16-ந்தேதி வரை...

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 16-ந்தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த தற்காலிக பாதையை நீட்டிப்பு செய்ய வேண்டும்’’, என்று மாநகராட்சிக்கு நிர்வாகத்துக்கு வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. த.வேலு, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், தலைமைப் பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்