சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகூறி வாங்கிய புகைப்படங்களை, ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-12-28 10:11 GMT
செங்குன்றம்,

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். 3 மாதங்களுக்கு முன்பு இவருடன், பெண் பெயரில் ஒருவர் ‘வாட்ஸ்அப்’ மூலம் பழகி வந்தார்.

அப்போது அவர், இளம்பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதற்காக இளம்பெண்ணின் புகைப்படங்களையும் கேட்டு பெற்றுக்கொண்டார்.

இந்தநிலையில் பெண் பெயரில் பழகியது ஆண் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர், இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, அந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு வரும்படி அழைத்து தொல்லை கொடுப்பதாக கொளத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பின்னர் இளம்பெண்ணை மிரட்டிய திருப்பூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்