முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பு: அ.தி.மு.க நிர்வாகிகள் இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2021-12-28 09:47 GMT
சென்னை,

ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் நவ.15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

சென்னை ஐகோர்ட்டில்  கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 8 தனிப் படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும்  முன் ஜாமீன் மனுகடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துத்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த மனுவை விசாரணைக்கு விரைவில் எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசா டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறி வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் போலீஸ் வட்டாரங்களில் ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப் படை போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.  அதைத் தொடர்ந்து தனிப் படை போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர். ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

 தற்போது ராஜேந்திர பாலாஜி கிருஷ்னகிரி , தர்மபுரி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு உதவியதாக  சில அ. தி.மு.க நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில், திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அ.தி.மு.க. இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை (35) மற்றும் திருப்பத்துார் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (36) ஆகிய இருவரையும் திருப்பத்துார் டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமையிலான நெல்லை மாவட்ட தனிப்படை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகளிடம் அடிக்கடி செல்போனில் தொடர்புகொண்டு பேசியதாகக் கண்டறியப்பட்டதின் பேரில் நெல்லை தனிப்படை போலீசார் 2 பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண் மற்றும் அவரது உதவியாளர்கள் எண்களில் தனிப்படையால் தேடப்படும் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பேசி வருவதாகக் கூறப்படும் நிலையில், தனிப்படை போலீசார் முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்