சேலம்: தான்சானியா நாட்டிலிருந்து வந்த முதியவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு!

தான்சானியா நாட்டிலிருந்து சேலம் வந்த 62 வயது முதியவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-12-28 07:34 GMT
சேலம், 

சேலம் டவுன் பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் சில நாட்களுக்கு முன்பு தான்சானியா நாட்டிலிருந்து சேலம் வந்தார். அவருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா என்பது குறித்து 2 நாட்களுக்கு முன்பு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பபட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே, அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்த 28 வயது இளம்பெண்ணான என்ஜினீயர் ஒருவர், கடந்த 13-ந் தேதி சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் நடந்த பரிசோதனையில் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் வெளிநாடுகளில் இருந்து சேலத்திற்குள் வரும் அனைவரையும் பரிசோதனை செய்து வீட்டிலேயே தனிமைப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் தற்போது வரை சேலத்திற்கு வந்த 360-க்கும் மேற்பட்டோரையும் வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்