ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் விசாரணை
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை
ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீசார் நவ.15-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடியானது. இதையடுத்து விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் 8 தனிப் படைகள் அமைத்து அவரைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டிலும் முன் ஜாமீன் மனுகடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துத்கொள்ளப்படவில்லை. இதனால் இந்த மனுவை விசாரணைக்கு விரைவில் எடுக்ககோரி மீண்டும் ஒரு மனு கே.டி.ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீசா டிச.18-ம் தேதி முதல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவர் பற்றி இதுவரை எந்தவித தகவலும் கிடைக்காமல் தனிப்படை போலீஸார் திணறி வருகின்றனர்.
இதனிடையே விருதுநகர் போலீஸ் வட்டாரங்களில் ராஜேந்திரபாலாஜியின் மொபைல் போன் சிக்னலை தனிப் படை போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதைத் தொடர்ந்து தனிப் படை போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர். ஓரிரு நாட்களில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ராஜேந்திர பாலாஜி கிருஷ்ணகிரி , தர்மபுரி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு உதவியதாக சில அ. தி.மு.க நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.