வருகிற 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வருகிற 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை: குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 20-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவிகளில் குளிக்க வருபவர்கள் கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அருவிகளில் குளித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் குற்றாலம் அருவிகளில் 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் கோபாலசுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்றிரவு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றுருவி ஆகியவற்றில் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.