புத்தாண்டை முன்னிட்டு புதுவை ஓட்டல்களில் மது விற்பனைக்கு சிறப்பு அனுமதி கலால் துறை அதிகாரி தகவல்

புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல்களில் மது விற்பனைக்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Update: 2021-12-27 18:59 GMT
புதுச்சேரி
புதுச்சேரியில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல்களில் மது விற்பனைக்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

முழு தளர்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவில்லை. இதற்கிடையே புதுவை அரசு வருகிற புத்தாண்டை கொண்டாட முழு தளர்வு அளித்துள்ளது.
இதனால் புதுவை கடற்கரை, நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் திறந்தவெளிகளில் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி புத்தாண்டு கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

சிறப்பு அனுமதி

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டுக்கு அரசு தடை விதித்துள்ளது.  இதனால் புதுவைக்கு வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்தநிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், அரசின் வருவாயை பெருக்கும் நோக்கிலும், மதுவிற்பனை அனுமதியில்லாத ஓட்டல்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இதுவரை ஓட்டல்களில் மதுவிற்பனை செய்ய 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கலால்துறைக்கு வந்துள்ளது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கலால்துறையில் பெறப்படும் விண்ணப்பங்களை அதிகாரிகள் விரைந்து பரிசீலனை செய்து அதற்கான சிறப்பு அனுமதியை உடனடியாக வழங்கி வருகிறார்கள்.

கண்காணிக்க 3 குழுக்கள்

சிறப்பு அனுமதியுடன் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது வழங்கக்கூடாது, அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த தகவலை புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்