காரைக்காலில் ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 3 மினிவேன்கள் பறிமுதல் 3 பேர் கைது
காரைக்காலில் ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 3 மினிவேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்காலில் ஒரே பதிவெண்ணில் இயக்கப்பட்ட 3 மினிவேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரே பதிவெண்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் கோட்டுச்சேரி பாரதியார் சாலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள தனியார் டயர் நிறுவனம் அருகே உள்ள காலிமனை ஒன்றில் டி.என்.68, பி.5965 என்ற வாகன பதிவு எண் கொண்ட நீலக்கலர் மினிவேன் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே அதே பதிவெண்ணில் மேலும் 2 மினி வேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
3 பேர் கைது
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த நிறுவன பிரதிநிதி மரிய ரெக்ஸ் அலக்ஸ்சாண்டர் (வயது 45), மினிவேன் டிரைவர்கள் அருள் (45), ரவி (52) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஒரு மினி வேனுக்கு மட்டுமே பெர்மிட், இன்சூரன்ஸ், தகுதி சான்றிதழ் எடுத்து கொண்டு 3 வாகனங்களையும் இயக்கியது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 3 மினி வேன்களையும் பறிமுதல் செய்தனர்.