பொன்னையாற்று பாலம் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது

திருவலம் அருகே பொன்னையாறு ரெயில்வே மேம்பால விரிசல் சீரமைப்பு பணி இரவு பகலாக நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Update: 2021-12-26 21:13 GMT
ரெயில்வே மேம்பால விரிசல்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே திருவலத்திற்கும் முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கும் இடையே பொன்னையாற்று ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. நூற்றாண்டைக் கடந்தும் இந்த பாலம் மிகவும் பலமாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த பாலத்தின் 38 மற்றும் 39-வது தூண்களுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது.

இந்த விரிசல் கடந்த 23-ந் தேதி கண்டுபிடிக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்று மாலை முதல் ரெயில் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டது.

சில ரெயில்கள் ரத்து

இதனால் அரக்கோணம், காட்பாடி மார்க்கமாக செல்லும் சில ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. ஒரு சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விரிசல் அடைந்த ரெயில்வே மேம்பாலத்தை சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பொறியியல் துறை அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுனர் குழுவினர் உடன் இருந்தனர்.

இரவு பகலாக நடந்த பணிகள்

இதனையடுத்து சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடறந்தன. பாலத்தின் தூண்கள கீழே மண்அரிப்பைத் தடுக்கும் வகையில் கான்கிரீட் கலவை போட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 38 மற்றும் 39 தூண்களுக்கு கீழே இரும்பு காரிடார்களை கொண்டு பலப்படுத்தும் பணி நேற்று இரவு வரை நடந்தது. அதன்பின் ரெயில்வே பாலம் போக்குவரத்துக்கு தயாரானது.

திருவலம் அடுத்த பொன்னையாறு ரெயில்வே மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனால் கடந்த 23-ந் தேதியிலிருந்து நான்கு நாட்களுக்கு ெரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. மேம்பாலத்தில் விரிசல் சரி செய்யும் பணி இரவு பகலாக போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. விரிசல் சரிசெய்யப்பட்டு 38 மற்றும் 39 தூண்களின் கீழே இரும்பு காரிடார்களை கொண்டு பலப்படுத்தும் பணி நேற்று இரவு முடிந்து போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து உடனடியாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முதலில் ரெயில் என்ஜினை கொண்டும் அதன் 2 சரக்கு ரெயில் என்ஜின்களை கொண்டும் சோதனை ஓட்டம் நடந்தது.

போக்குவரத்து தொடங்கியது

இதில் எந்தவித அதிர்வும் தெரியாததால் பயணிகள் ரெயில் விட முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முதல் முறையாக சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று இரவு பொன்னை ஆற்று மேம்பாலம் வழியாக இயக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) முதல் சில ரெயில்கள் இந்த பாதை வழியாக இயக்கப்படும். அவ்வாறு இயங்கினாலும் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே செல்லும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்